கோவை:கோவையில் பள்ளி நிர்வாக தேர்தலின்போது, பள்ளியின் முன்னாள் நிர்வாகத் தலைவரை பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கண்ணப்பநகர் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் சங்கமம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என்ற பெயரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் சங்கமம் மெட்ரிகுலேஷன் பள்ளி எல்கேஜி முதல் பத்தாவது வரை தொடங்கப்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஈடுபட்டவருடன் பெண் போலீஸ் தகராறு ஆரம்பத்தில் 150 உறுப்பினர்களுடன் சங்க விதிகளுக்குட்பட்டு, தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியின் நிர்வாகத்தில் உறுப்பினர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 27 பேர் மட்டும் ஆயுள் சந்தா நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று (மே15) பள்ளி நிர்வாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தற்போது நிர்வாக குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இல்லாத சிலரை பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வைப்பதாகக் கூறி, உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் கஸ்தூரி, நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டி சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் முன்னாள் தலைவரான சந்திரசேகரன் என்பவரை ஒருமையில் பேசியதுடன் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சமாதானம் செய்தவர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் உதவி ஆய்வாளர் பள்ளியின் முன்னாள் தலைவரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டி:தனியார் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம்