கோயம்புத்தூர்: சென்னையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார். உதகையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இன்று காலையில் ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற சூழல் போராளி பிர்சா முண்டாவின் 122-வது நினைவு நாள் பழங்குடி மக்களுடன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து விமானம் மூலம் சென்னை செல்ல உதகையிலிருந்து அன்னூர் வழியாக கோவை வந்தார். ஆளுநரின் வருகையை ஒட்டி மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநரின் பாதுகாப்புக்காக நெகமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் முத்து கல்யாணி அன்னூர் ஜேஜே நகர் பகுதியில் சாலையில் நின்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.