தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்! - பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

கோவை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

By

Published : Feb 11, 2022, 7:52 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள போகம்பட்டி அடுத்த பொன்னாங்காணி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (47). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 7ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த மயில்சாமி என்கிற பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.

இதனையடுத்து இருசக்கர வாகனங்கள் கீழே விழுந்த நிலையில் மயில்சாமி கொண்டுவந்த பால் கீழே கொட்டியது. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அதே ஊரைச் சார்ந்த இருதரப்பினரின் குடும்பத்தினரும் மோதிக்கொண்டனர்.

இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அன்று மாலை மீண்டும் ராமுவின் வீட்டுக்குச் சென்ற மயில்சாமியின் குடும்பத்தினர், உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ராமுவைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதனால் தலையில் பலத்த காயம் அடைந்த ராமு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராமுவின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்

ராமு பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மயில்சாமி உள்பட 14 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டம் உள்பட ஆறு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) இந்தச் சம்பவம் தொடர்பாக பொன்னாங்காணி பகுதியைச் சேர்ந்த பாலகுரு, பூபதி, மயில்சாமி, மாரிமுத்து, மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேரை கைதுசெய்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 11) அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், கணேஷ் ஆகிய இருவரை கைதுசெய்தனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள ஏழு பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராமு நேற்று இரவு (பிப்ரவரி 10) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மேலும் மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவர் (டிஐஜி) முத்துசாமியை நேரில் சந்தித்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே ராமுவை தாக்கியவர்கள் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் ராமுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வதாக கூறி ராமுவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.

அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த நிலையில் ராமு உயிரிழந்த விவகாரத்தில் போகம்பட்டியை சார்ந்த விக்னேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:போதையில் தகராறு: அரை நிர்வாணமாகச் சுற்றிய வழக்கறிஞர் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details