கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகைப் பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார கிராமங்களான லிங்காபுரம் – காந்தவயல் இடையே காந்தையாறு (பவானி ஆறு) ஓடுகிறது.
இந்த ஆற்றின் குறுக்கே 2005ஆம் ஆண்டு 30 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள இவ்விடத்தை சரியாக கணக்கிடாமல் காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டதால் ஆரம்பம் முதலே பிரச்னை உருவாகியது.
பருவ மழைக்காலத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியை எட்டும்போதே இந்த பாலம் மூழ்க தொடங்கிவிடும். அணையின் நீர்மட்ட உயரம் நூறு அடியைக் கடந்துவிட்டால் பாலம் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி விடுவதோடு இதன் இணைப்பு சாலைகளும் தண்ணீருக்கடியில் சென்றுவிடும்.
தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் போக்குவரத்திற்கு இப்பாலத்தை மட்டுமே நம்பியுள்ள காந்தையூர், உளியூர், ஆளூர், காந்தவயல் கிராம மக்கள் காந்தையாற்றில் சுமார் அரை மணிநேரம் பரிசலில் பயணித்தே கடந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் நிலை பரிதாபமானது. எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி சுமார் நாற்பதடி ஆழ ஆற்றை பரிசல் மூலம் கடந்து பள்ளி சென்று திரும்புகின்றனர். மூங்கிலால் ஆன இந்த பரிசல்களில் பயணிக்கும் போது தண்ணீர் புகுந்து விடுவதால் புத்தக பைகள் நனைந்து விடுவது, ஆற்றின் போக்கால் பள்ளி செல்ல தாமதமாவது என பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.