கோயம்புத்தூர்: கோவை வனக்கோட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், இளம் யானைகள் உயிரிழப்பும் அடங்கும். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த யானைகள் உயிரிழப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தரக்குழு அமைத்து தமிழ்நாடு வனத்துறை மார்ச் 31ஆம் தேதி உத்தரவிட்டது.
அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வருதீன், அலுவலர்கள் பத்மா, சமர்த்தா, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழுவினர் களத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், யானைகள் உயிரிழப்புக்கான காரணிகளை தரவுகளுடன் அறியவேண்டும் எனவும், வருங்காலத்தில் இயற்கைக்கு மாறாக ஏற்படும் யானைகள் மரணங்களைத் தடுக்கும் வழிமுறைகளை வகுத்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.