கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் சிறுவாணி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு-கேரள எல்லையான இந்த பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில், சாடிவயல் அடுத்த போரத்தி பழங்குடியினர் கிராமம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் யானை ஒன்று படுத்துக்கிடப்பதாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு நேற்று (ஆகஸ்ட் 8) பழங்குடியின மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் போளுவம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலக்குறைவால் இருப்பது தெரியவந்தது.
மேலும் பல நாள்களாக உணவு உட்கொள்ளாததால் அதன் உடல் மெலிந்து காணப்பட்டது. இதனையடுத்து வடவள்ளி கால்நடை மருத்துவர் பிரபுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அந்த யானையின் உடலில் குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு வரை பல்வேறு மருந்துகள் யானைக்கு வழங்கப்பட்டன. இன்று (ஆகஸ்ட் 9) இரண்டாவது நாளாக வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.