தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இப்படி நடைபெற்ற தொடர் கண்காணிப்புகளால் நோய் பாதிப்புகளும் குறைந்தது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 14 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 சிறுவர்கள் உள்பட 32 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு 28 சிறுவர்கள் உட்பட 152 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் கடந்த 9ஆம் தேதி வந்த தகவலின்படி டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 108 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 184 பேர் சிகிச்சை பெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சியும் , சுகாதாரத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்படுபவர்களின் தகவல்கள் முறையாக அரசிடம் கொண்டு செல்லப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் அனுமதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க முடிவதில்லை எனவும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
டெங்கு, வைரஸ் காய்ச்சல்களால் 184 பேர் அனுமதி! மேலும் படிக்க: டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி பலி