நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் பொள்ளாச்சி தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து அவர் மக்கள் முன் திறந்த வேனில் உரையாற்றினார்.
அப்போது ஸ்டாலின்பேசியதாவது, “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் போது, அடிமையாக உள்ள இந்த ஆட்சியும் அகற்றப்படும்.
ஊழல் செய்வதில் நம்பர் ஒன் கில்லாடியாக விளங்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம், எடப்பாடி பழனிசாமி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது ஒரு கபட நாடகம். வேலூரில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையத்தின் உதவியோடு முயற்சிகள் நடந்துவருகிறது.
ஓட்டுக்குப் பணம் கொடுக்க டிஜிபி ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்சில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. இதனை போலீஸ் தடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணியினர் சோதனையிடுவோம். யாராலும் மறக்க முடியாத சோகம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம். அதனை அரசியலாக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் உடந்தையாக இருந்துள்ளனர்.
சர்வாதிகாரி மோடி, உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என ஸ்டாலின் தன் உரையை முடித்துக்கொண்டார்.