கோவை: ப்ரூக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றம் செயல்படுகிற முறை மிகுந்த வேதனை அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு உள்ள எண்ணிக்கை பலத்தை வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, பொதுப்பணித்துறைக்கு எதிராக என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் நடைபெறாத நிலையில் எப்படி 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்தும், மக்கள் ஏமாற்றப்படுவதைக் கண்டித்தும் வருகிற 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசு அதன் பொறுப்பிலிருந்து விலை நிர்ணயம் செய்வதை கார்ப்பரேட் நிறுவனத்திடம் வழங்குகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்போது அது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் விதிக்கப்படாததால் சர்ச்சை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் குழப்பம் இருக்கும்பட்சத்தில் 25 மசோதாக்களை இயற்றியது நியாயமற்றது. அது ஜனநாயக விரோதச் செயல். கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசப்படுவது அர்த்தமற்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்