கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஷாஜகான் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கரோனா அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருந்த ஷாஜகான் மே 20-ம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது மகன் நதீயிடம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளனர்.
பின்னர் ஷாஜகான் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது, ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது, அதில் ரூ.11.55 லட்சம் என கட்டணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் புகார் அளித்ததார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் விசாரணைக்கு சென்ற போது, மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிகிறது.
கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் - தனியார் மருத்துவனை உரிமம் ரத்து இதனையடுத்து அம்மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.
மேலும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யுமாறும், விசாரணை முடியும் வரை புதியதாக யாருக்கும் கரோனா சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் 4 மருத்துவமனைகள் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், மற்ற மருத்துவமனைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.