கோவைமாநகராட்சியின் சார்பில் அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்ட கழிவறையில் இரு டாய்லெட் கோப்பைகளை ஒரே அறைக்குள் வைத்து அமைத்துள்ளதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக, கதவுகள் கூட இல்லாத அந்த கழிவறை பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமலிருந்த நிலையில், அவற்றை தற்போது முறையாகப் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ஒரே கழிவறைக்குள் இரண்டு டாய்லெட் கோப்பைகளை மிகவும் நெருக்கமாக வைத்து, அதுவும் இடையில் தடுப்புச்சுவர்கள்கூட இல்லாமல் அமைத்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான கழிவறையைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தாலும் அவற்றை எவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என வேதனைத் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் இம்மாதிரியான வடிவமைப்பில் தான் கழிவறைகள் மாநகராட்சியின் ஏனைய பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றனவா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். மேலும், இது குறித்து மாநகராட்சி ஆணையர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்களின் வரிப்பணத்தை மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறான பராமாரிப்புப் பணிகளில் செலவிடுவது கண்டனத்திற்கு உரிய ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே அக்கழிவறையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இடைச்சுவர் இன்றி அமைக்கப்பட்ட கழிவறைகள்... கோவை பொதுமக்கள் அதிருப்தி இதையும் படிங்க: வடிவேலு பட பாணியில் மூன்று பேரை திருமணம் செய்த பெண் - யாருடன் வாழ்வது என இளைஞர்கள் மோதல்