தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் இடங்கள், இல்லங்களில் இன்று (அக்டோபர் 12) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையின் மூன்று இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகளுடன் ஆதரவாக இருந்ததாகக் கூறி கோவை புலியகுளம் பகுதியில் வசித்துவந்த மருத்துவர் தினேஷ், டேனிஷ் ஆகிய இருவரை கேரள காவல் துறையினர் கைதுசெய்து கேரள சிறையில் அடைத்துள்ளனர்.
யார் இந்த சந்தோஷ்?
இந்நிலையில் இன்று அவர்களது இல்லங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோன்று பொள்ளாச்சியில் சந்தோஷ் என்பவருடைய இல்லத்திலும் சோதனையானது நடைபெற்றுவருகிறது. சந்தோஷ் என்பவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் 2014ஆம் ஆண்டு மே மாதம் காணாமல்போனதாக அவரது தந்தை அர்ஜுனன் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் காணாமல்போனதாகச் சொல்லப்பட்ட சந்தோஷ், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.