Teacher suspended:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக சுகுமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஆன்லைன் வகுப்புகளும், வழக்கமான வகுப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் சுகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளின்போது, மாணவிகளுக்குத் தனியாக வீடியோ கால் செய்து, டி-ஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனவும் கூறி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், வகுப்புகளுக்கு வரும் மாணவிகளைத் தேவையில்லாமல் தொடுவதோடு, பாடங்களைத் தாண்டி மாணவிகளுடன் உணவு உண்ண ஆசைப்பட்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக மாணவிகள், தலைமையாசிரியரிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஆசிரியர் ஒருவாரத்திற்கும் மேலாகப் பள்ளிக்கு வருகை தரவில்லை. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த மாணவ - மாணவிகள் பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் நிலவியது.
இதனையடுத்து காவல் துறையினரும் பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மாணவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க:அலைக்கழித்த குடிபோதை காவலரின் மண்டை உடைப்பு: டெலிவரி பாய் கைது