கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகளால் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி, தடாகம் பள்ளத்தாக்கு கனிமவள பாதுகாப்புக் குழு சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடாகம் பகுதியில் மகேஸ்வரி என்பவர் இடத்தில் மண் எடுத்த லாரியை சமூக ஆர்வலர் கணேஷ் என்பவர் தடுத்துள்ளார். அவரை தாக்கிவிட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் லாரியை மீட்டுச் சென்றிருக்கின்றனர். பின்னர் செங்கல் சூளை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கணேஷ், ராஜேந்திரன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு கணேஷின் இல்லத்திற்கு சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக, சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ராஜேந்திரன் குடும்பத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.