தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வீஸ் சாலையை அகலப்படுத்தக் கோரிசமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம் - சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் சர்வீஸ் சாலையை அகலப்படுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்

By

Published : Sep 25, 2019, 6:19 PM IST

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியிலிருந்து கேரள மாநிலம் வாளையாறுவரை ரூ.850 கோடி செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் இதில் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்த ஆறு வழிச்சாலையில் செல்லும் முக்கிய ஊர்களின் சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண சாலைக்கு கோவை மாவட்டம் கணியூரில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்

இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் கீழ் போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலை 60 மீட்டருக்கு பதிலாக 40 மீட்டராக குறைக்கப்பட்டதால் நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுவரை ஏற்பட்ட விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரியும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, குறைக்கப்பட்ட சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரி அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம், சமூக ஆர்வலர்கள் சார்பில் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு நேற்று இரவு கருமத்தம்பட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து இன்று காலை முதல் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இதனையடுத்து அங்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்றும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். எனினும் தங்கள் அலுவலகத்திலேயே போராட்டம் நடத்துவதாக கூறி 20க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரி பல்வேறு இடங்களில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சர்வீஸ் சாலை குறுக்கப்பட்டதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி அதிகரித்து வருவதாகவும், தங்களுடைய கோரிக்கையை அரசு அலுவலர்கள் ஏற்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அதனை சரிசெய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details