கோவைகாந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்குச்சொந்தமான இடத்தில் அரசு பொருட்காட்சி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் வேளாண்துறை கண்காட்சி, கால்நடைத்துறை கண்காட்சி மற்றும் கோவை மாநகர காவல் துறையின் கண்காட்சி என பல அரசு துறைகளின் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் காளிமுத்து என்ற ஆயுதப்படை காவலர் நேற்று(ஜூலை.15) பணியில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் ரத்த காயங்களுடன் அரங்கில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை கண்ட கண்காட்சியில் இருந்த ஊழியர்கள் காவலருக்கு குண்டடிப்பட்டது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த காவலர் காளிமுத்துவை கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சம்பவம் நடத்த இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.