ஆனைக்கட்டி அடுத்த ஜம்புகண்டி பிரிவில் கடந்த 24ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சமூக ஆர்வலரும், மருத்துவருமான ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார். குடிபோதையில் வந்த நபரின் வாகனம் மோதியதில், இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.
விபத்தில் காயமடைந்த மகளை மருத்துவமனைக்குச் சென்று பார்க்காமல் மனைவி சடலத்துடன், ரோட்டில் அமர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம் நடத்தினார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் விபத்துத் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று மருத்துவர் ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் குமாரிடம் மனு அளித்துள்ளனர். அதில் விபத்து ஏற்பட்ட சம்பவத்தின்போது வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜி, அசோக் ஆகியோர் இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், ஆனால் முதல் தகவல் அறிக்கையில் குடிபோதையில் விபத்து ஏற்பட்டதற்கான பிரிவுகள் சேர்க்கப் படவில்லை என தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டிவந்த பாலாஜி குடிபோதையில் இருந்தது கேரளாவில் இருக்கும் கோட்டத்துரா மருத்துவமனை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடன் வாகனத்தில் வந்த அசோக் குடிபோதையில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் பதிவேடுகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மருத்துவர் மனைவி கொலை வழக்கு வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், "மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, மது போதையில் விபத்து ஏற்படுத்துதல் பிரிவைச் சேர்த்து, உடனடியாக இருவர் மீதும் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்", என்றனர்.