தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை' - ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

கரோனா பரவல் காரணமாக கோவை ஜல்லிக்கட்டுப் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும், போட்டியை ஊடகங்கள் வாயிலாக நேரலையில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் சமீரன்
மாவட்ட ஆட்சியர் சமீரன்

By

Published : Jan 13, 2022, 6:44 PM IST

கோவை: செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக அமைக்கப்பட்ட மைதானத்தில் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சமீரின் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டியளித்த அவர், "கரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதற்காக வழிகாட்டு நெறிகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

அரசின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. பொதுமக்கள் ஊடகங்கள் வாயிலாக நேரலையில் போட்டியைக் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமே அரசால் வழங்கப்பட்டுள்ளன. சேவல்கட்டு, ரேக்ளா போன்ற மற்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசாணையில் எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லை. காளைகள், மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றுடன், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மாடுகளுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவுசெய்த மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பணியில் 2000 காவலர்கள்

இதனிடையே போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், 'போட்டி நடைபெறும் நாளன்று மைதானத்தில் பாதுகாப்பு - பொதுமக்கள் வந்தால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு 2000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்' என பதிலளித்தார்.

இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details