கோயம்புத்தூர்: சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலினைப் பாராட்டி மு.க. ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார். அந்த மடலில், ”காவல் ஆய்வாளர் மாதய்யனுக்கு வணக்கம். சட்டம் - ஒழுங்குக்குச் சவால்விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதிசெய்வதே காவல் துறையின் முதன்மைப் பணியாகும்.
1 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற தீரம்!
அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள். கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளரான தாங்களும், தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்டீர்கள்.
இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களைத் தாங்கள் விசாரிக்கையில், சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்று சண்டையிட்டதில் தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும் காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள்.