தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கேரள அரசிடம் ஸ்டாலின் வலியுறுத்தல் - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள முதலமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Feb 1, 2022, 3:38 PM IST

கோயம்புத்தூர்: சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் திட்டப் பயனாளிகளுக்குத் தங்குதடையின்றி குடிநீர் வழங்க சிறுவாணி அணையின் சேமிப்பைப் பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (பிப்ரவரி 1) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "கோயம்புத்தூர் நகருக்கு நீர் வழங்க வேண்டிய முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான மொத்த நீர்த் தேவையான 265 மில்லியன் லிட்டரில், 101.4 மில்லியன் லிட்டர், சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

ஒப்பந்தம் செய்யப்பட்டது

சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆயினும் கடந்த ஆறு ஆண்டுகளில், கேரள அரசு 0.484 டி.எம்.சி.யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் நீரை வழங்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பெய்துள்ள போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, முழு நீர்த்தேக்க மட்டத்திற்குப் பதிலாக, இருப்பு நிலையைக் குறைத்துப் பராமரிக்கிறது என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் குறைவதால், இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் நீரை வழங்க முடிகிறது.

சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்துவைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கேரள நீர்ப்பாசனத் துறை அலுவலர்களுடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரையும் அணுகியுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை

பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்க மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முழுக் கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைக்காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேலும், கேரள நீர்ப்பாசனத் துறை, ஜனவரி மூன்றாம் தேதி முதல் நீர்வரத்து வரும் வால்வ்-4-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழ்நிலையில், கேரள அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த வால்வ்-4-ன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கேரள நீர்ப்பாசனத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்

இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், மேலும், 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜனவரியில் ஜிஎஸ்டி உச்சம்; ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details