கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்துள்ள திப்பம்பட்டியில் நேற்று நடக்க இருந்த குழந்தைத் திருமணத்தை சமூக நலத் துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். உடுமலை பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை சிஞ்சுவாடியில் உள்ள மாமன் வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆக. 20) காலை திப்பம்பட்டியைச் சேர்ந்த நபருடன் அந்தச் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக நலத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அலுவலர்கள் அறிவுரை
திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பின்னர் இரு வீட்டாரையும் சுஞ்சுவாடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு வரவழைத்து, சிறுமிக்கு 21 வயது நிறைவடைந்த பின்னர்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கூறி இரு வீட்டாரிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை கூறி அலுவலர்கள் அனுப்பிவைத்தனர்.
யுனிசெப் அமைப்பின் ஆய்வு
குழந்தைத் திருமண விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து யுனிசெப் அமைப்பு (UNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆய்வறிக்கை ஒன்றை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போதைய சூழலில் 65 கோடி பேர் குழந்தைத் திருமணத்திற்கு ஆளாக்கப்பட்டு வாழ்ந்துவருகின்றனர் எனவும் அதில் பாதி பேர் இந்தியா, வங்கதேசம், பிரேசில், எத்தியோபியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வசிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைத் திருமணத்தை இந்தியாவில் கட்டுக்குள் கொண்டுவர தொடர் முயற்சி நடைபெற்றுவந்தாலும், உலகின் மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைத் திருமணம் பாதியாகக் குறைந்துள்ளது என்பதையும், கிராமப்புறங்களிலும் ஏழை மக்களிடம் இந்தச் சிக்கல் தொடர்ந்து நீடித்துவருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: ‘குடும்பம் குட்டிங்க இருக்காங்க... பாத்து சூதானமா போங்க...’- மதுரை மக்களை கவர்ந்த உதவி ஆய்வாளர்