கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் (வயது 68) போட்டியிடுகிறார்.
பி.ஆர்.நடராஜன் கல்லூரியில் இளம்கலை பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈர்க்கப்பட்டார்.இந்திய மாணவர் சங்க தலைவராக பொருப்பேற்று மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பொருப்பேற்று இளைஞர்களின் உரிமைக்காக களம் கண்டவர்.
1968ல் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இனைத்துக்கொண்டார். கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தொழிற்சங்க தலைவர் கே.ரமணி அவர்களின் மூத்தமகள் வனஜா அவர்களை திருமணம் செய்தார்.இத்தம்பதிகளுக்கு ஆர்த்தி, அருணா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
கட்சியின் மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் முழுநேர ஊழியராக 1977 முதல் 42 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகவும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து தலையீட்டை செலுத்துபவராகவும், அம்மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராகவும் அவர் திகழ்கிறார்.
துப்புரவு தொழிலாளர் சங்கத்திலும், ஹோட்டல் தொழிலாளர் சங்கத்திலும் மாவட்ட தலைவராக பொருப்பேற்று தொழிலாளர்களின் உரிமைக்காக திறம்பட பணியாற்றி உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய, ஐந்தாண்டுகளில் கோவை ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்தினார். தனது காலத்தில் 11 ரயில்களை அறிமுகம் செய்தார். அதைத்தவிர, கோவை ரயில்நிலையத்தில் நிற்காமல் நேராக பாலக்காடு சென்ற ரயில்களை கோவை ரயில்நிலையத்தில் நின்று செல்ல முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.