நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் என்பவரும் உயிரிழந்தார்.
உயிரிழந்த 13 பேரின் உடல்களும், தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, 13 பேரின் உடல்களும், இறுதி சடங்கிற்காக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சூலூர் வந்த பிரதீப் உடல்
அதன்படி, பிரதீப்பின் உடல் தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து, கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடலுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனும் உடன் பயணித்தார்.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி ஆகியோர் உடலை திருச்சூர் அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த திருச்சூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரதாபன், கேரள அரசு சார்பில் உடலை பெற்றுக்கொண்டார்.