கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா பாதிப்பு காரணமாக புதிய வரிகள் இருக்கும் என்று பலரும் எண்ணிய நிலையில், சென்ற ஆண்டை விட இம்முறை அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று விவசாயிகள் விவகாரத்தில் பொய்களை வைத்துக் கொண்டு கற்பனையில் எதிர்க்கட்சிகள் பேசி கொந்தளிப்பை ஏற்படுத்தும் முயற்சியை செய்துவருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்காக மண்டிகளுக்கு கடந்த ஆண்டே 500 கோடி ஒதுக்கியது. இந்நிலையில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நடந்துவருகிறது.
உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று சிலர் செயல்பட்டுவருகின்றனர். 2004-2014 வரை 10 ஆண்டுகள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாட்டில் 10 அமைச்சர்கள் இருந்தும் பெரிய அளவில் மூலதனம் வரவில்லை. ஆனால் தற்போது 2 லட்சம் கோடி அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரை வைத்து கொண்டு டிடிவி தினகரன் ஏற்கனவே ஒரு கட்சியை வைத்துள்ளார். 2019க்கு பிறகு திமுக பலவீனமாகி வருகிறது. திமுகவின் அடிப்படை கருத்தே அடித்தளம் இல்லாத ஒன்று.