கோயம்புத்தூர்: செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறி அடித்தார்.
திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இளைய தலைமுறையினருக்கு நமது கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பாஜக பொங்கல் விழாவை நடத்தி வருகிறது. பிரதமர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் திருவள்ளுவருக்கு காவி உடை இருந்தது குறித்த கேள்விக்கு, திமுக உண்மையை புரிந்துகொள்ள தொடங்கி விட்டார்கள். திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர்.
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் ஊர்தி அனுமதிக்காதது குறித்து பாதுகாப்புத்துறை விளக்கம் அளிக்கும். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு எந்த பொருள்கள் அதில் இடம் பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்கும்.
சட்டரீதியாக எதிர்கொள்வோம்
அதனடிப்படையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் தான் தமிழ்நாடு ஊர்தி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஊர்தியில் கூட ஆதிசங்கரர் படம் இடம்பெறக் கூடாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதால் நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி என்பது கருத்து சுதந்திரம் அல்ல. குழந்தைகளைப் பாதுகாக்கும் NCPCR அமைப்பின் (National Commission for Protection of Child Rights) விதிகளுக்கு எதிராக நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக அணுகுவோம்.