தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என் நிலம் வருமானத்திற்காக அல்ல, பறவைகளுக்காக... - விவசாயம்

கோயம்புத்தூர்: செயல்முறை அறிவு ஏதுமற்று ஏட்டுக்கல்வியை மட்டுமே பயிலும் இளைய சமூகம், இயற்கை உழவு போன்றவற்றில் நாட்டம் செலுத்த வேண்டும் என்கிறார் உழவர் முத்து முருகன். பல்லுயிர்களை காக்கும் பொருட்டு மனித இனத்தையும் காப்பதற்காக தன் நிலத்தையே பறவைகளுக்கு பந்தி வைத்தவர் பற்றிய செய்தித்தொகுப்பு...

man
man

By

Published : Sep 5, 2020, 9:33 PM IST

’காக்கை, குருவி எங்கள் ஜாதி - நீள்

கடலும், மலையும் எங்கள் கூட்டம்’

என்றார் மாகவி பாரதி. அவர் பாடி வைத்ததை தேடிச் செய்து வருகிறார், இயற்கை உழவர் முத்து முருகன். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த முத்து முருகனுக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கை உழவு மீதும், பல்லுயிர்கள் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆர்வம்தான் தன்னுடைய இரண்டரை ஏக்கர் நிலத்தையே பறவையினங்களுக்காக பகிர்ந்தளிக்கவும் தூண்டியுள்ளது.

ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் வந்த பின்பு பயிர்த்தொழில் பணத்தொழிலாகிப்போனது. இதனால் உழவுக்கும் உயிரினங்களுக்கும் இருந்த தொடர்புச் சங்கிலி அற்றுப்போனது. அதை மீட்டுருவாக்கவே தற்போது இப்பணியில் இறங்கியுள்ளார் முத்து முருகன். தன்னுடைய நிலத்தில் கம்பு, சோளம், மூங்கில் போன்றவற்றை பயிரிட்டுள்ள அவர், அத்தனையையும் கால சூழலால் உணவின்றி வரும் பறவைகளுக்காகவே விட்டுள்ளார்.

இயற்கையை அச்சுறுத்தும் பருவ மாற்றங்களுக்கு மனிதர்களே பொறுப்பு என்று கூறும் முத்து முருகன், இதனால் பல்லுயிர்கள் பாதிப்பதை நாம் எண்ணிப்பார்ப்பதே இல்லை என்றும் வேதனை தெரிவிக்கிறார். பறவைகளுக்காக பயிரிடப்பட்டுள்ள தனது நிலம், தற்போது வண்டுகள், பூச்சிகள் உள்ளிட்ட சிறு சிறு உயிரினங்களுக்கும் உதவியாக இருப்பதாக பெருமிதப்படுகிறார் அவர்.

மனித சமூகம் பிழைக்க வேண்டியே இப்பெரும்பணியை செய்து வருகிறேன்...

தேவைக்கு அதிகமாக பொருளீட்டுவதை குறைக்க விழிப்புணர்வாக, வேட்டி, துண்டை மட்டுமே தனது ஆடையாகக் கொண்டுள்ள முத்து முருகன், உழவை சரியாக செய்யவில்லை எனில் சிற்றுயிர்கள் அழியும் என்றும் கவலை கொள்கிறார். அவை அழிந்தால் மனித இனமும் சேர்ந்தே அழியும் என்பதாலேயே இயற்கை உழவை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார்.

என் நிலம் வருமானத்திற்காக அல்ல, பறவைகளுக்காக...

நிலத்திற்கு பறவைகள் அடிக்கடி வந்து அதன் எச்சம் விழும்போது, அப்பகுதியே உயிர்ச்சூழலாக மாறி, உழவுக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று கூறும் இவரைத்தான், இச்சமூகம் பிழைக்கத்தெரியாத ஆள் என எள்ளுகிறது. மனித சமூகம் பிழைக்க வேண்டியே இப்பெரும்பணியை செய்து வருவதாக, அவரின் உதட்டோர புன்னகை நமக்குச் சொல்கிறது.

இதையும் படிங்க: கரோனாவால் மூடப்பட்ட கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம்

ABOUT THE AUTHOR

...view details