கோயம்புத்தூர்: 2019ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழந்த நகை வியாபாரி அருண்குமார், தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 3 நம்பர் லாட்டரி விற்கும் வியாபாரிகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து கைதுசெய்து வருகின்றனர்.
இச்சூழலில், கரோனா காலத்தில் தற்போது மீண்டும் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த சீட்டின் விலை ரூபாய் 30 முதல் 200 ரூபாய்வரை விற்கப்படுகிறது. இதில் தினக்கூலிக்கு சென்று வரும் தொழிலாளர்கள் லாட்டரி சீட்டு வாங்குவதிலேயே, அவர்கள் சம்பாதிக்கும் தொகையை பெருமளவு இழந்து விடுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இதனால் குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவைகளான உணவுக்கு மிகவும் அல்லப்படும் நிலை உருவாகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் போல், மீண்டும் ஒரு குடும்பத்தின் தற்கொலை நடைபெறாமல் இருக்க கோவை மாவட்ட காவல் துறையினர் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தங்களின் வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்தவர்கள் கூறும்போது, “முதலில் சிறிய தொகைக்கு லாட்டரி சீட்டு வாங்க தொடங்குவோம். அதில் கிடைக்கும் சிறு பரிசு பொருட்கள் ஏற்படுத்தும் ஒருவித ஆசையால், மென்மேலும் லாட்டரி சீட்டு வாங்க ஆசைவரும். அப்படியே, போக போக முழு பணத்தையும் அதற்கு செலவு செய்து கடனாளியாக நேரிடும். பின்னர் படிப்படியே குடும்பத்தை வறுமையில் வாட்டும். எனவே அரசு இதுகுறித்து சரியான நடவடிக்கைகள் எடுத்து, லாட்டரியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என கனத்த குரலில் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கூறுகையில், “கோயம்புத்தூரில், ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரி, இணைய லாட்டரி, வெளி மாநில லாட்டரி ஆகியவற்றின் விற்பனையை பொறுத்தவரை, காவல் துறையினரால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு மேலும், இணையதளம், வாட்ஸ்அப் மூலமாக லாட்டரி முடிவுகள் அனுப்பப்பட்டு வருகிறது. நேரடியாக விற்பனையாளருக்கும், லாட்டரி சீட்டு வாங்குபவர்களுக்கும் தொழில்நுட்பம் காரணமாக இடைவெளி குறைந்துள்ளதால், ஆதாரங்கள் திரட்டுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
போலி லாட்டரி விற்பனையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதன் விற்பனை தொடர்பான தகவலை காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்ட தனிப்பிரிவு வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவலளித்தால், இது போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
இணையதளம், இணைய பண பரிமாற்றம் என காலம் மாறிவிட்டதால், மோசடி தொடர்பான தகவல்களை திரட்டுவது என்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக அமைகிறது. எனினும், காவல் துறையினர் சீரிய முயற்சிகள் மேற்கொண்டு, லாட்டரி விற்பனை செய்பவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.