கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தியபடி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை சுற்றி வருகிறது. இதற்கு பாகுபலி என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வருகின்றனர்.
இந்த பாகுபலி காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இன்று (ஜூன் 27) காலை 6 மணிக்கு தொடங்கியது.
ஆப்ரேஷன் 'MP20T1'
வேடர்காலனி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர், ஐந்து மருத்துவ குழுவினருடன் முகாமிட்டுள்ளனர். துப்பாக்கி, மயக்க ஊசிகளுடன் வனத்தில் பாகுபலி யானையை கண்காணித்து பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த ஆப்ரேசனுக்கு MP20T1 என வனத்துறையினர் பெயரிட்டுள்ளனர்.
'பாகுபலி வெளியில் வந்தால் மட்டுமே ஆப்ரேஷன்' - வன அலுவலர் பிற்பகல் ஒரு மணி வரை காட்டு யானையை கண்காணித்த நிலையில், தற்போது யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த பாகுபலி காட்டு யானையை பிடிக்க வெங்கடேஷ், கலீம், மாரியப்பன் ஆகிய 3 கும்கி யானைகள் பயன்படுத்தபட்டுள்ளன. பிற்பகல் வரை யானையை பின் தொடர்ந்தும், அதை பிடிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
உணர்ச்சிமிகு 'பாகுபலி'
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், "தற்போது பாகுபலி யானை வனப்பகுதியின் மலையடிவாரத்தில் இருக்கிறது. சமதளம் அல்லது சாலை பகுதிக்கு வந்தால்தான் ரேடியோ காலர் பொருத்தப்படும். யானை அடர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்தால் மட்டுமே ஆப்ரேசன் நடத்தப்படும். இல்லையெனில் கண்காணிப்பு பணி மட்டுமே நடைபெறும்.
யானை டிரோன் மூலமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகுபலி காட்டு யானை திடகாத்திரகாமாக இருக்கிறது என்பதாலும், உணர்ச்சி மிகுந்த யானையாக இருப்பதாலும் அதன் அருகில் செல்ல முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஸ்கெட்ச்!