கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ”கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த மின்வெட்டை பார்க்கும்பொழுது கடந்த கால திமுக ஆட்சியின் ட்ரெய்லர் போல் உள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய நிலக்கரியை தருவதில்லை என முதலமைச்சரும் மின் துறை அமைச்சரும் தெரிவித்து வருகின்றனர்.
அதனை தெளிவுபடுத்த வேண்டியது பாஜகவின் கடமை. இந்தியாவில் 2.22 கோடி டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் வினோதமான மின்வெட்டு எப்படி நிகழ்கிறது? தூத்துக்குடி மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பிலிருந்த போதும் தமிழ்நாடு அரசு ஏன் நான்கு பவர் ஸ்டேஷன்களில் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்தது? தமிழ்நாட்டில் செயற்கை மின்வெட்டை உருவாக்கி தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவது திமுகவிற்கு கைவந்த கலை.
அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாட்டிற்க்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி வேண்டும் என கூறுகிறார். தமிழ்நாட்டில் 5 மின் உற்பத்தி நிலையங்களிலும் 85 சதவிகிதம் இருக்கும் பொழுதுதான் 72000 டன் நிலக்கரி தேவைப்படும். 2006ஆம் ஆண்டு மின்சாரத்தில் நூதன திருட்டுக்கு சுழி போட்டது திமுக தான். ஹைதராபாத்தில் உள்ள குக்கிராமத்தில் கூட மின்வெட்டு கிடையாது அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் எட்டு மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு மெகாவாட் சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் அமைச்சருக்கு கமிஷனாக தர வேண்டும். கோவை மாவட்டத்தில் இடையர்பாளையம் ஜனவரி 2020 ஆம் ஆண்டு டேன் ஜட்கோ பி.ஜி.ஆர் எனர்ஜிக்கு சப்ஸ்டேஷன் போட 224 கோடி பட்ஜெட் போடப்பட்டது. தற்பொழுது அங்கு கல்லும் மண்ணும் தான் உள்ளது. ஒன்றிய அரசுதான் அனைத்தையும் தர வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு எதற்கு அரசு இருக்க வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு அனைவரும் அடுத்த வருடத்திற்குள் ஜெனரேட்டர் வாங்கி கொள்ளுங்கள். சொந்தமாக பவர் பிளான்ட் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரசை எவ்வித வேலையும் செய்யவில்லை. இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்த பின்பு பாஜக பாராட்டு விழா நடத்தும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம். ஆனால் கவர்னர் கான்வாய் மீது கல்லை கொண்டு தாக்கினால் மாலையில் பெயில் கிடைத்துவிடுகிறது. இதுதான் தமிழ்நாட்டின் சட்ட நிலைமை.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய டிஜிபி அமைதியாக உள்ளார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது பி.சி.ஏ வழக்கு உள்ளதால் நாளை(ஏப்ரல்.23) சென்னையில் நடைபெற உள்ள நீதித்துறை விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தனது அருகில் சட்டத்துறை அமைச்சரை அமர வைக்க கூடாது என அவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர தகுதி இல்லை. உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்தால் மட்டுமே கமலாலயம் வருவதற்கு அருகதை பெறுவார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தப்படும்: தமிழ்நாடு அரசு