கோயம்புத்தூர்:வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்ற போது அங்கு நிகழ்ந்த கலவரத்தால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு இன்று (மார்ச் 26) நடைபெறுகிறது.
பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுவதால் வார்டு உறுப்பினர்கள் வருகை புரிந்தனர். மொத்தம் இங்கு 15 இடங்கள் உள்ள நிலையில் அதிமுக 8, திமுக 6, சுயேச்சை 1 ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் அதிமுக திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சிலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் கலவரத்தை தடுக்க காவல்துறையினர் தடியடி மேற்கொண்டனர்.
இன்று நடைபெறும் இந்த தேர்தலுக்கு சிறப்பு தேர்தல் அலுவலர்களாக தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நிலவி வரும் பரபரப்பான சூழலை தடுக்க மாநகர காவல்துறை துணை ஆணையர் உமா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் ஒரு புறம் தேர்தலை தடுக்க திமுகவினர் முயற்சிப்பதாக அதிமுகவினரும், மறுபுறம் காவல்துறை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக திமுகவினரும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடங்கியது