கோவையில் பிப்ரவரி 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து செட்டிபாளையம் சாலையில் உள்ள மைதானத்தில் போட்டிக்கான கால்கோலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (பிப். 9) நாட்டினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வரும் 21ஆம் தேதி கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசுக்குதான் உள்ளது.
கோவையில் நான்காவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கான கால்கோல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி இந்த ஆண்டு 1000 காளைகள் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை துறை சார்பில் 18 குழுக்கள், பொது சுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாடுபிடி வீரர்களுக்கு முன்னதாகவே வளர்ச்சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் கலந்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். விளையாட்டு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். விவசாயிகளின் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்காக ஜல்லிக்கட்டு சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: நேரு குறித்து இழிவான விமர்சனம்- சர்ச்சையில் சிக்கிய ஹெச். ராஜா!