திருப்பூர்: பல்லடம் சாலை வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் செயல்பட்டுவரும் பேன்டோன் டையர்ஸ் என்ற தனியார் சாய ஆலையில் கடந்த 14ஆம் தேதி, இரண்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்ய, திருப்பூர் பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ஆறு பேர் சென்றனர்.
அதில், வடிவேல் (32), அவரைக் காப்பாற்றச் சென்ற, நிறுவனத்தில் வேலைசெய்யும் மேலாளர் தினேஷ்பாண்டி (32), சாய ஆலையின் பிட்டராகப் பணியாற்றிவந்த ராஜேந்திரன் (55) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டியைச் சுத்தம் செய்யவைத்தது தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி (48) என்பவர் மீது, ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி காவல் துறையினர் கைதுசெய்தனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆய்வுசெய்து, சாய ஆலைக்கு நோட்டீஸ் வழங்கினார்.
இந்நிலையில், விஷவாயு தாக்கி, மூவர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வுசெய்து, விசாரணை நடத்த டெல்லியிலிருந்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) மாலை திருப்பூர் வந்து சம்பவம் நடந்த சாய ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசு உதவிகள் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், “மூன்று நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். சாய ஆலை கழிவுநீர் தொட்டில் மூழ்கி மூவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த ஆலையில் ஆய்வுசெய்துள்ளேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்தேன். இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு SC-ST சட்டப்படி 8.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நான்கு லட்சம் போடப்பட்டுள்ளது.
MS சட்டப்படி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சாய ஆலைகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்குவது தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சாய ஆலை உரிமையாளர்கள், மனிதர்களைப் பயன்படுத்தாமல் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம்செய்ய வேண்டும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சாய ஆலையை ஆய்வுசெய்த தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் அலுவலர்கள் முறையாக ஆய்வுகள் மேற்கொண்டார். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆனால் அலுவலர்கள் அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம்செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும் அதனைக் கவனிக்கத்தவறும் அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க:காதல் தோல்வி - சென்னையில் மாணவி தற்கொலை