கோயம்புத்தூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று (ஆக. 12) மதியம் 12:00 மணி அளவில் 92 பயணிகளுடன் கோ ஏர் விமானம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலே நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தீ பிடித்ததற்கான புகை ஒலி எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்ட விமானி, இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விமானம் தரை இறங்குவதை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 12.57 மணியளவில் விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் தீப்பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகள் இல்லாததால் விமான பயணிகள் நிம்மதி அடைந்தனர்.