கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள குளோபல் நக்ஷத்ரா அப்பார்மெண்டில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார் பாக்மர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் அக்குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவருக்கு எத்தன் பாக்மர் என்ற 10 வயது மகனும், குஷி பாக்மர் என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கோவை கொடிசியா சாலையில் உள்ள ராக்ஸ் என்ற தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். எத்தன் பாக்மர் 5ஆம் வகுப்பும், குஷி பாக்மர் மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் உணவு இடைவெளியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மற்ற குழந்தைகளுடன் குஷி பாக்மர் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு அப்போது மைதானத்தில் இருந்த கோல்போஸ்ட்டை பிடித்து குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், கோல்போஸ்ட் சாய்ந்ததில் குஷி பாக்மருக்கு தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் குஷி பாக்மரை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் ஹேமந்த் குமார் பாக்மருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு ஹேமந்த் குமார் பாக்மர் சென்று பார்த்த போது, குஷி பாக்மர் சுய நினைவின்றி சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்களிடம் விசாரித்த போது, வலது காதுக்கு பின்னால் தலையின் உட்புறம் அடிபட்டும், இடது நெற்றியில் சில இடங்களில் இரத்த கசிவும், பின்பக்க மூளையில் இரத்த கசிவு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு குழந்தைகள் விளையாடும் கால்பந்து மைதானத்தில் ஆபத்தான இரும்பு கோல்போஸ்டை அகற்றாமல் அஜாக்கிரதையாகவும், குழந்தைகளை தன்னிச்சையாக விளையாட அனுமதித்த பள்ளித் தாளாளர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி மற்றும் விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன், பரத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹேமந்த் குமார் பாக்மர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன், பரத், ஆசிரியர் அமரீஸ்வரி, பள்ளி தாளாளர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப் ஆகிய 5 பேர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குளோரோஃபார்ம் கொடுத்து பெண் பாலியல் வன்புணர்வு... போட்டோ எடுத்து மிரட்டிய அரசு ஊழியர்...