கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை அருகிலுள்ள கண்ணப்பன் நகரில் வசிப்பவர் அப்துல் ரஹீம். 85 வயதான இவர், தையல் இயந்திரத்தில் தனக்கு தேவையான தண்ணீர், மதிய உணவு, நாற்காலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சுமார் 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
அதிகாலை எழுந்து தானே சமைத்து வேலைக்கு புறப்படும் இவர் அந்தி சாயும் பொழுதில் வீடு திரும்புகிறார். மேடு, பள்ளம் என்று பார்க்காமல் இந்த தள்ளாடும் வயதிலும் தன்னுடைய தையல் இயந்திரத்தையும் தள்ளிக்கொண்டு வேலை செய்யும் இவருக்கு ஒருநாள் வருமானம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரைதான்.