கோயம்புத்தூர்: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் திங்களன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் தேசத்தின் விடுதலைக்கான போராடிய ஒவ்வொரு மண்ணின் மைந்தர்களின் அளப்பரியா வீரத்தையும், தியாகத்தையும் நாம் மனதில் வைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் கோயம்புத்தூர் மண்ணின் பங்கு போற்றத்தக்கது.
இந்த மண்ணில் ஆங்கில அரசுக்கு எதிராக ரயில்கள் கவிழ்ப்பு, விமான படைத்தள எரிப்பு, சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்தல், அரசு அலுவலகங்களை கைப்பற்றி போட்டி அரசு நடத்துதல் போன்ற போராட்டங்கள் முதல் சிறைவாசம், திமிர் வரி கட்டியது, உயிர் நீப்பு போன்ற தியாகங்கள் வரை நடந்தேறியுள்ளது.
கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள் இன்றைய தலைமுறையினர் அறியாத கோயம்புத்தூர் பற்றிய முக்கிய போராட்ட நிகழ்வுகளை இங்கே காணலாம். 1942ஆம் ஆண்டு ஒண்டிபுதூரில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் ’வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல்வேறு போராட்ட திட்டங்கள் தீட்டப்பட்டன. இந்தத் திட்டங்களை செயல்படுத்த 100-க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்தனர்.
ஆங்கிலேயே ரயில் கவிழ்ப்பு: இந்த நேரத்திலேயே, நீலகிரி மாவட்டம் அரவங்காட்டில் உள்ள ஆங்கிலேயே ராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடி மருந்துகள், போர்க் கருவிகளுடன் சரக்கு ரயில் ஒன்று போத்தனூர் வழியாக ஈரோடு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்து. இந்த தகவலின் அடிப்படையில் போராட்டக்கார்கள் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் ஆகஸ்ட் 13ஆம் நள்ளிரவில் ரயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தனர். இதையடுத்து அந்த வழியாக அதிகாலை வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. 10-க்கும் பெட்டிகள் அனைத்தும் அருகிலிருந்த குளத்தில் கவிழ்ந்தன. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சூலூர் விமான படை தளம் எரிப்பு:இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களின் அடுத்த இலக்காக இருந்தது சூலூர் விமானப் படை தளமே. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று போராட்டக்காரர்கள் விமான படைத்தளத்தில் இருந்த கொட்டகைகள், லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தில் 2 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். இந்த தகவல் சூலூர் காவல் துறையினருக்கு சென்றுவிட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து போராட்டத்தை முடக்கினர்.
இதையடுத்து சூலூர், கண்ணம்பாளையம், ஒண்டிபுதூரில் பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் ஒவ்வொருவராக போலீசாரால் வேட்டையாடப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். நூற்றுக்கானோர் மீது வழக்குகள் பதியப்பட்டன. கடுங்காவல் தண்டனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக ராணுவ விமான தள சேதத்திற்கு மக்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. இந்த இழப்பீடு வழக்கமாகச் செலுத்தும் வரிகளோடு "திமிர் வரி" என்பதையும் சேர்த்து வசூலிக்கப்பட்டது. இதுபோல பல்வேறு வராற்று நிகழ்வுகள் கோவை தன்னகத்தே வைத்துள்ளது.
கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள் கோவையில் போற்றத்தக்க போராட்ட வீரர்கள்:கோவை மாவட்டத்தில் தொழிலாளர் இயக்கத்தை கட்டி எழுப்பிய என்.ஜி.ராமசாமி, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு வாதாடிய சி.சுப்ரமணியம், காந்தியின் சுதேசி இயக்கத்துக்கு துாணாய் நின்ற கதர் அய்யாமுத்து, சுப்ரி எனப்படும் சுப்பிரமணியம், அவிநாசிலிங்கம் செட்டியார், ஜி.கே.சுந்தரம், அப்துல் ரஹீம், வெள்ளிங்கிரி கவுண்டர் உளிட்டடோர் இந்த நேரத்தில் போற்றத்தக்கவர்கள்.
இதில் குறிப்பாக, எஸ்.பி.நரசிம்மலு நாயுடு மாவட்டத்தின் முதல் பத்திரிகையாளர் என்ற பெருமை கொண்டவர். அந்த காலங்களில் இவர் எழுத்தும், பேச்சும் கோவையை தாண்டி கொங்கு மண் முழுவதும் உள்ள இளைஞர்களிடையே சுதந்திரப் போருக்கான வேட்கையை எழச்செய்தது. இதுபோன்று நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோமாக.
இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தினம்: போராட்ட வாழ்க்கையிலேயே வாழ்ந்து வரும் தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு!