கோவை மாவட்டம் சூலூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி டெம்போ ஒன்று சென்றது.
சந்தேகத்திற்கிடமாக டெம்போ சென்றதால், காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்றனர். இதனைக் கண்ட டெம்போ ஓட்டுநர், இந்திரா நகர் என்ற இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
இந்நிலையில், வாகனத்திலிருந்த மற்றொருவர் தப்பியோட முயற்சிக்கும்போது காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து, வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் வாகனம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முல்லா ராம் என்பவருடையது என்பது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலத்திலிருந்து போதைப்பொருளான குட்காவை தமிழ்நாட்டிலுள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக காய்கறி மற்றும் டீத்தூள் பொருள்களுக்கு நடுவே மூட்டை மூட்டையாக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் 658 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சென்னை மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!'