கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை ஏர் அரேபியா விமானம் சார்ஜாவில் இருந்து வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் தங்களது தலையில் அணிந்திருந்த தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேண்டின் முட்டி பகுதியில் தங்கத்தைக் கட்டிகளாக மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் கோவையைச் சேர்ந்த உமா(34) கடலூரைச் சேர்ந்த பாரதி(23) தஞ்சாவூரைச் சேர்ந்த திருமூர்த்தி(26) திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் கணபதி(29) ஆகிய நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 4.9 கிலோ என்றும், அதன் சர்வதேச மதிப்பு 2.59 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்