வெளிநாட்டிலிருந்து கோவை வரும் விமானங்கள் மூலம் தங்கம், போதைப் பொருள்கள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்துவருகிறது. தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்திவருவது, உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவருவது என விதவிதமான கடத்தலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (டிச. 05) காலை திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர் கோவையிலிருந்து ஷார்ஜாவிற்குச் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். உள்ளே நுழைந்த அவர் அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒரு சூட்கேசை கொடுத்து தான் விமான நிலையத்திற்கு உள்ளே வரும்போது தனது நண்பர் ஒருவர் இந்தச் சூட்கேசை கொடுத்ததாகவும் பின்னர் தான் வந்து வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சூட்கேஸ் காலியாக இருப்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பாதுகாப்புப் பிரிவு காவல் துறையினரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் அந்தச் சூட்கேசை ஸ்கேன் செய்தனர். அப்போது அந்தச் சூட்கேசில் மெத்தாம்பிடமைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.