சென்னை: தலைநகர்சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உயர் அலுவலர்கள் சென்னை அம்மா மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு மூவரும் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர். முன்னதாகப் பேசிய சங்கர் ஜிவால், "இன்றைய ஆலோசனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் நாளைமுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்" என்றார்.
இதுவரை 150 கோடி ரூபாய் அபராதம்
அதனைத் தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், "சென்னையில் பரவல் அதிகரித்துவருவது தொடர்பாக மத்திய அரசு கடிதம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
- முகக் கவசம் எளிமையான வழிமுறை அல்ல; வலிமையான வழிமுறை
கரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றம் வரும், அதற்குப் பதற்றப்பட வேண்டாம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1.15 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. சென்னையில் 10 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன.