Zonal level monitoring committee:சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாக கரோனா தொற்று, மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதைத் தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, பெருநகர சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், புத்தாண்டு, பண்டிகை நாள்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க ஏதுவாக மண்டல அமலாக்கக் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
அதனடிப்படையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று (டிசம்பர் 31) தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து ஒரு மண்டலத்திற்குச் சுழற்சி முறையில் மூன்று அமலாக்கக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன. மற்ற நாள்களில் மண்டலத்திற்குச் சுழற்சி முறையில் இரண்டு அமலாக்கக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.
இக்குழுக்கள் தங்கள் மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியினை மேற்கொண்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். மேலும், கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவர்.
எனவே, பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்கின்ற பெயரில் தடைவிதிக்கப்பட்டுள்ள பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள், நிகழ்ச்சிகளுக்குப் பொதுமக்கள் செல்லும்பொழுது முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல் போன்ற அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:College Student Commits Suicide: ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை