தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி படிக்க கட்டாயப்படுத்திய சொமெட்டோ: மாறாத மொழி ஆதிக்க மனநிலை! - மொழித் திணிப்பு

உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கோரிய வாடிக்கையாளரிடம், மொழி தெரியாததால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் பதிலளித்துள்ளது. இதன் உரையாடல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், சொமெட்டோ நிறுவனத்திற்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Zomato customer care HINDI ISSUE, zomato hindi imposition issue, hindi, zomato
இந்தி படிக்கச் சொல்லி பாடம் எடுத்த சோமாட்டோ

By

Published : Oct 19, 2021, 8:33 AM IST

Updated : Oct 19, 2021, 8:54 AM IST

சென்னை:இந்தியாவில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பெருநிறுவனங்களாக சொமெட்டோ, ஸ்விக்கி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இதில், சொமெட்டோ ஹரியானாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய நிறுவனம்.

சொமெட்டோ, நாடு முழுவதும் 525 நகரங்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் உணவகங்களுடன் இணைந்து உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டுவருகிறது. உணவு டெலிவரி சார்ந்து சொமெட்டோ அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில், சொமெட்டோ வாடிக்கையாளர் ஒருவருக்கும், சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மைய பணியாளருக்கும் இடையேயான உரையாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டெலிவரியில் பிரச்சினை

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் ஒரு உணவகத்தில் இரண்டு சிக்கன் ரைஸ் பவுல் காம்போவை (சிக்கன் ரைஸ் + பெப்பர் சிக்கன்) ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு சிக்கன் ரைஸ் மட்டும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் விகாஷ் - சொமெட்டோ கேர் இருவருக்கும் இடையிலான உரையாடல்

இதனால், அவர் உடனடியாக சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். இதையடுத்து, சொமெட்டோ முதலில் விகாஷிற்கு, உணவகத்தின் தொடர்பு எண்களைக் கொடுத்து அவர்களிடம் விசாரிக்கும்படி கூறியுள்ளது. அந்தக் குறிப்பிட்ட உணவகத்தை விகாஷ் தொடர்புகொண்டபோது, சொமெட்டோவிடம் புகார் அளித்து, பணத்தைத் திரும்பிப் பெற்றுக்கொள்ளும்படி பதிலளித்துள்ளது.

தமிழ்த் தெரிந்தவர்கள் இல்லை

இதை, விகாஷ் சேவை மையத்திடம் தெரிவித்தார். ஆனால், உணவகத்தின் தரப்பிலிருந்து அந்த வகையில் எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று சொமெட்டோ கூறியுள்ளது.

பின்னர், விகாஷ் தனது ஆர்டர் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து, பதிலளித்த சொமெட்டோ, உணவகத்தை ஐந்து முறை தொடர்புகொண்டும், மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியது.

வாடிக்கையாளர் விகாஷின் ட்வீட்

இதற்கு, "தமிழ்நாட்டில் சொமெட்டோ இருக்கிறது என்றால், தமிழ் பேசுபவர்களையும் நீங்கள் பணியமர்த்தியிருக்க வேண்டும் அல்லவா. வேறு யாரை வைத்தாவது முயற்சி செய்து என்னுடைய பணத்தை வாங்கித் தாருங்கள்" என்றார் விகாஷ்.

'ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்'

அப்போதுதான் சொமெட்டோ சேவை மையம் மொழி ஆதிக்க கருத்தை உதிர்த்தது. "உங்களின் கனிவான கவனத்திற்கு, இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று வகுப்பெடுத்தது.

இதனால், கோபமடைந்த வாடிக்கையாளர் விகாஷ், தனக்கும் சொமெட்டோ கேருக்கும் இடையிலான உரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஒரு ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

வாடிக்கையாளர் விகாஷ் ட்வீட்டிற்குப் பதிலளித்த சொமெட்டோ

அதில், "சொமெட்டோவில் உணவை ஆர்டர் செய்தபோது, ஒரு உணவு மட்டும் தவறிவிட்டது. இது குறித்து கேட்டபோது, எனக்கு இந்தி தெரியாததால், எனது பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என சொமெட்டோ சேவை மையம் தெரிவித்தது. மேலும், ஒரு இந்தியனாக நான் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என எனக்குப் பாடம் எடுத்தது.

நீடிக்கும் மொழித் திணிப்பு

மேலும், வாடிக்கையாளர் சேவை மைய அலுவலருக்குத் தமிழ் தெரியாததால் நான் பொய் சொல்கிறேன் எனக் கூறுகிறார். ஒரு வாடிக்கையாளரிடம் இதுபோன்று பேசக் கூடாது" என்று சொமெட்டோ சேவை மையத்திற்கு அறிவுரை வழங்கினார். இதன்பின்னர், சொமெட்டோ நிறுவனம், விகாஷைத் தொடர்புகொண்டு பேசி, அவரின் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்றொரு வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரிய சொமெட்டோ

இதுபோன்ற பிரச்சினை தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்வதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு தேவை எனவும் பிற வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் தங்களது கருத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தினர். 'இந்த விரும்பத்தகாத செயலுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்' என சொமெட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது.

இருப்பினும், இந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கு பொதுவெளியில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி #reject_zomato என்ற ஹேஷ்டேக்கில் இணையவாசிகள், சொமெட்டோவைக் கண்டித்து ட்ரெண்டாக்கினர்.

இதையும் படிங்க: ’இந்தி தெரியாது... தெரிந்த மொழியில் பதில் அளியுங்கள்’ - ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Last Updated : Oct 19, 2021, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details