சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், இந்திய விடுதலை வேள்வியில் தமிழ்நாட்டு வீரர்கள் ஆற்றிய பங்களிப்பைத் தொகுத்து, 'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை ஸ்டாலின் குணசேகரன் 1999ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த வரலாற்றுப் புதையலான நூலுக்கு அன்றைய முதலமைச்சர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அணிந்துரை வழங்கினார்கள்.
“நாட்டுப் பற்றில் தமிழ்நாடு வீரர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வழிகாட்டுகிறது இந்த நூல். எழுத்தாளர் பெருமக்கள் பலர் நெய்த நூல் கொண்டு அரியதோர் ஆடையாக இதனை உருவாக்கியுள்ள அன்பர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
தமிழாகவே வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களிடம் பாராட்டைப் பெறுவது என்பது எளிதல்ல. அவரிடமே பாராட்டைப் பெறும் அளவுக்கு வரலாற்று நூலை உருவாக்கிக் கொடுத்தவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்.
தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி 18 ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் என்றால், அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.
இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும். புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும் என கூறினார். சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.
சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தமிழ்ச்சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக உயர பாடுபட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரால் சென்னையில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம். அதே போல், மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் 114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு, இடத்தைத் தேர்வு செய்துள்ளது. மிகப் பிரமாண்டமாக மதுரையில் விரைவில் எழ இருக்கிறது.
பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது என்பதை நான் கம்பீரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1960–70ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட 875 நூல்களில் 635 நூல்களை இந்த ஓராண்டு காலத்தில் மறுபதிப்பாக கொண்டு வந்துள்ளோம்.
பேரறிஞர் அண்ணா குறித்த ‘மாபெரும் தமிழ் கனவு’ ஆங்கிலத்திலும், வைக்கம் போராட்டம் மலையாளத்திலும், கலைஞரின் திருக்குறள் அதனுடைய உரை தெலுங்கிலும், தி.ஜானகிராமன் சிறுகதைகள் கன்னடத்திலும் வரப் போகின்றன என்றார்
கால்டுவெல்லின் 'திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலை மொழி அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். அதனை அரசு வெளியிட்டுள்ளது.
சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக கொண்டு வர இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பிறமொழியில் இருந்து தமிழுக்கும் பல்வேறு நூல்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 100 குழந்தை இலக்கிய நூல்கள் வெளியிட இருக்கிறோம். அதில் 27 இதுவரை வெளியாகி உள்ளது.