தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறாமையால் நிகழ்ந்த விபரீதம்: வில்வித்தை வீரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது

தேசிய அளவில் நடந்த வில்வித்தைப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாக கலந்துகொள்ளவிருந்த வீரரை கத்தியால் குத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கத்தியால் தாக்கிய இளைஞர்
கத்தியால் தாக்கிய இளைஞர்

By

Published : Aug 22, 2021, 5:38 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் என்பவருடைய மகன் ஆதித்யா (21). பொறியியல் பட்டதாரியான ஆதித்யா, மாநில அளவில் பல்வேறு வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஜூன் 26ஆம் தேதி சென்னை ஐசிஎப் வடக்கு காலனியிலுள்ள வில்வித்தை பயிற்சி மையத்திற்கு ஆதித்யா பயிற்சிக்காக சென்றுள்ளார். பயிற்சியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மதியம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

வில்வித்தை வீரரைத் தாக்கிய நபர்

அப்போது, சாலையில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆதித்யாவை வழிமறித்து ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் எனக்கூறி செல்போனை வாங்கியுள்ளார்.

பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆதித்யாவை தலை, கைவிரல், முட்டி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், ஆதித்யாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ஆதித்யாவின் தந்தை சுந்தர், சென்னை ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தேசிய அளவில் நடக்கும் வில்வித்தைப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக ஆதித்யா பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக ஜூலை மாதம் முதல் செல்லவிருப்பதும் தெரியவந்தது.

ஆதித்யா இப்போட்டிக்கு செல்லவிருப்பதை விரும்பாத காரணத்தினால் ஆதித்யாவை தாக்கினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இளைஞர் கைது

இதையடுத்து, ஆதித்யாவை தாக்கிய நபர் சென்னை கொரட்டூர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (25) என காவல் துறையினருக்குத் தெரியவந்தது.

ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் மீஞ்சூரிலுள்ள அவரது அத்தை வீட்டில் பதுங்கியிருப்பதாக ஐசிஎப் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பதுங்கி இருந்த புருஷோத்தமனை கைது செய்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு

விசாரணையில் ஆதித்யா உடன் ஒன்றாக வில்வித்தை பயிற்சி எடுத்த கொரட்டூர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வரும் 14 வயது சிறுமியின் காதலன் தான் இந்த புருஷோத்தமன் எனத் தெரியவந்தது.

கத்தியால் தாக்கிய இளைஞர்

மேலும், தேசிய அளவில் நடந்த வில்வித்தைப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக ஆதித்யா தேர்வானதால், தன் காதலியின் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும்; இதனால், ஆத்திரத்தில் ஆதித்யாவை புருஷோத்தமன் கத்தியால் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, புருஷோத்தமன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மருமகன் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்த மாமனார்

ABOUT THE AUTHOR

...view details