சென்னை: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி, நாசர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் உதவியாளர்கள் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அமைச்சர்களை தொடர்பு கொண்டு தனது மணிபர்சை காணவில்லை எனவும் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பிறகு, 'என்ன கவர்மெண்ட் நடத்துறீங்க, மக்கள் தொண்டன் என ஓட்டுகேட்டு மட்டும் வந்தீங்களே' என கேள்விகளை எழுப்புவதாகவும், தான் திருமங்கலம் பகுதியில் இருப்பதாக தெரிவிப்பதாகவும் கூறி, அவரது புகாரை விசாரியுங்கள் என அமைச்சர்களின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ந்த போன, அண்ணாநகர் தனிப்படை போலீசார் குறிப்பிட்ட தொடர்பு எண்ணை வைத்து செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் ஜெ.ஜெ நகரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நபர் தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த 26 வயதான பிரேம்குமார் என்பது தெரியவந்தது. பிரேம் குமார் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்து முடித்துவிட்டு, 2017ஆம் ஆண்டு முதல் வேலை தேடியும், இதுவரை கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். அவர் கடந்த ஆக. 14ஆம் தேதி அன்று சென்னைக்கு வந்து ஜெ.ஜெ நகர், ரேடியோ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி, ஸ்விக்கியில் டெலிவரி பாயாக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஆக.28ஆம் தேதி, பிரேம் குமார் தூங்கி கொண்டிருந்தபோது, அவரது மணிபர்ஸ் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் அவருடைய ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் 2000 ரூபாய் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக காவல் துறையில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரது மணிப்பர்சை திருடி சென்ற நபர் செல்போன் மூலமாக தொடர்புகொண்டு 2500 ரூபாய் கொடுத்தால் மணிபர்சை தருவதாக கூறியதால் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால் அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காந்தி ,நாசர் , சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரின் தொடர்பு எண்களை கூகுள் மூலமாக தேடி எடுத்து தொடர்பு கொண்டும், இ-மெயில் மூலமாகவும் தொந்தரவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதால் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் நிலை என்னவாகும்?