மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மெரினாவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளதை, எப்படி சரி செய்யப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன என்றார். மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து நவம்பர் 11 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.