சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி (46) கடந்த 2ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை அண்ணாசாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜியை மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி உத்தரவின் பேரில் ஊழியர்கள் ஏழு பேர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
குறிப்பாக மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் லோகேஸ்வரி தம்பதியினர் வீடியோகால் மூலம் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மையத்தின் உரிமையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் லோகேஸ்வரி தம்பதியினரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் நேற்று (மே.6) மாலை கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ரயில் தண்டவாளத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு.. சதி வேலையா? - போலீசார் விசாரணை