சென்னை: நூல் விலை உயர்வு குறித்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில் பேசியஅதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, "விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறை ஜவுளித்துறை, நூல் விலை உயர்வின் காரணமாக இத்துறை முடங்கி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
செஸ் (CESS) வரி குறைப்பால் முதலாளிக்கு தான் லாபம் அடைகின்றனர். தொழிலாளர்களுக்குப் பலனில்லை. நூல் விலை 100 ரூபாயில் இருந்து 165 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆர்டர் எடுக்கையில் ஒரு விலை, தயாரிக்கையில் ஒரு விலை என்பதால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
தீர்மானத்தில் பேசியகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், "நூல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வராததால், தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது" என்றார்.
இதற்குப் பதிலளித்து பேசியகைத்தறி அமைச்சர் காந்தி, "CESS வரி ரத்து செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இறக்குமதி வரி 11 விழுக்காடு உயர்ந்துள்ளதாலும், பருத்தி பதுக்கல் போன்ற காரணங்களினாலும் தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
எந்தத் துறையில் பாதிப்பு என்றாலும், முதலில் குரல் கொடுப்பவர் முதலமைச்சர். உரிய ஆலோசனைகள் நடத்தியதோடு, ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், ஒன்றிய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.
அப்போது பேசியதொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "நூல் விலை ஏற்றம் காரணமாக தமிழ்நாட்டின் ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பிரச்னையில் முதலமைச்சர் அக்கறை காட்டி வருகிறார். தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலை உயர்வைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!'