ஆண்டுதோறும் மார்ச் மாத இரண்டாவது வியாழக்கிழமை அன்று, உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் சிறுநீரகம் பாதித்தோர் தொடர்ந்து உயிர்வாழ மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வை கருப்பொருளாகக் கொண்டு இன்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
அவ்வகையில், அதிகளவாக சிறுநீரக தானம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்படும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் இங்கு செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முதலமைச்சரே இருந்து வருகிறார். தமிழகத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதனை தானமாக பெற வேண்டி பதிவு செய்து, 5,946 பேர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள சவால்கள் குறித்தும், தமிழகத்தில் அது செயல்படும் முறைகள் குறித்தும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரகவியல் துறைத்தலைவர் டாக்டர்.பாலசுப்ரமணியம் கூறும்போது, ” சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு, ரத்த சோகை போன்றவை இருப்பதுடன், கை, கால்கள் வீக்கமாகவும் இருக்கும். மேலும், இரவில் இரண்டு மூன்று முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பார்கள். இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
’அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சை அனைத்தும் இலவசம்’ சிறுநீரக நோய் ஒரு முறை இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கூறும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு சிறுநீரக பழுது ஏற்பட்டால் அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும். அதற்கடுத்து முழுவதும் அவர்கள் குணமடைய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய முடியும்.
ஏற்கனவே நன்றாக உள்ள விருப்பமுள்ள உறவினர்களிடம் இருந்தும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் என, சிறுநீரக தானம் இரண்டு வகையாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது. இச்சிகிச்சை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது.
’சிறுநீரக நோய் குறித்து கிராம மக்களிடம் அதிக விழிப்புணர்வு தேவை’ சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், மருத்துவர் ஆலோசனைப்படி தொடர் மருந்துகளை உட்கொண்டு அவர்களும் சாதாரண மனிதர்களை போல வாழ முடியும். தமிழகத்தில் சிறுநீரக தானம் அளிப்பதில் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. அதே நேரம் சிறுநீரக நோய் குறித்து கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா- சுகாதாரத்துறை எச்சரிக்கை