சென்னை: நமது சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனினும், முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு செய்திகளும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சட்டத்திற்கு புறம்பாக விளைச்சல் நிலங்களில் மின்வேலி அமைப்பது மற்றும் மனித - யானை மோதல்கள் போன்ற விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை யானைகளை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யானைகள் கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 27,312 யானைகள் இருப்பது உறுதியானது.
அவற்றில் அதிகமாக கர்நாடகாவில் 6,049 யானைகளும், அஸ்ஸாமில் 5,719 யானைகளும், கேரளாவில் 5,706, தமிழ்நாட்டில் 2,761 யானைகள் இருப்பதும் தெரிய வந்தது.
கடந்த 23 ஆண்டுகளாக யானையைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பா.ராமகிருஷ்ணன் யானைகளின் இறப்புக்கு முக்கியக் காரணம் குறித்து நம்மிடம் கூறினார். அதில், "யானைகளின் இறப்பு விகிதத்தைக் கண்டறிய 2017 முதல் 2020 வரை ஒரு ஆராய்ச்சி செய்தோம். இதில் தமிழ்நாட்டில் உள்ள 1,566 இறந்த யானைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை 19 யானைகளின் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கூடங்களில் பெற்றோம்.
மேலும், இதனை திறமையான கால்நடை மருத்துவர்களை வைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தோம். இந்த ஆராய்ச்சியில் யானைக்குட்டிகளின் இறப்புகள் அதாவது 1 முதல் 5 வயது வரை அதிகமாக இருந்தது. யானையின் குட்டிகளுக்குப் பிறக்கும் போதே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகவே இருக்கும்," என்றார்.
மேலும் கோடைகாலம் யானைகளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். ஏனெனில் கோடைகாலங்களில் உணவுப் பற்றாக்குறையும் அதிக அளவில் இருப்பதால், யானைகள் தங்களது குட்டிகளுக்குப் போதுமான அளவு பால் கொடுக்க இயலாது. எனவே, 1 வயது முதல் 5 வயது வரை யானைக்குட்டிகள் உயிர் வாழ்வது சவாலாகவே இருக்கும் எனக் கூறினார். மேலும் 25 முதல் 30 வயதான யானைகள் குறிப்பாக ஆண் யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
யானை வழித்தடங்களை குறுக்கீடு செய்வதும், மேய்ச்சல் இடங்களில் களைச்செடிகள் ஊடுருவுதல் உள்ளிட்ட காரணங்களாலும் யானை இறந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஆண் யானைகள் தொடர்ந்து இறந்தால் பாலின விகிதம் குறைந்து யானையின் எண்ணிக்கை வரும் கால கட்டத்தில் குறையலாம் எனவும் அவர் எச்சரித்தார்.